Tuesday, November 22, 2011

வாழ்க்கை பய(ண)ம்

அன்னை மடியில் செல்லக்குழந்தையாய் சிலகாலம் 
பாட்டியின் மடியில் பேரனாய் தவழ்ந்தேன் சில காலம் 
தம்பியுடன் சண்டையிடும் சகோதரனாய் சில காலம் 
மாமனுக்கு செலவு வைக்கும் மருமகனாய் சிலகாலம் 
காலப்பெருவழியில் சில காலம் கழித்துவிட்டேன் சுகமாக 
இனிவரும் காலம் எல்லாம் எனக்கு கஷ்ட காலமா? 

அன்னைக்கு மகனாக மீதமுள்ள பலகடமை 
தம்பிக்கு அண்ணனாக செய்யவேண்டும் பல கடமை 
அக்காவின் தம்பியாக அடைக்க வேண்டும் என் கடனை 
குடும்ப தீபம் அணையாமல் காப்பதுதான் என் கடமை 
வாழ்க்கை பயணத்தை தொடங்கிவிட்டேன் சிறு வயதில் 
பயமே வாழ்க்கை ஆகி உறைந்து விட்டேன் என் வழியில்...

அச்சடித்த காகிதத்திற்காய் இயந்திரமாய் மாறிவிட்டேன் 
பணம்தின்னி கழுகுகளின் வாயிலே இரையானேன் ..
வறுமை எனை வாட்டியதால் பிஞ்சிலே பழுத்துவிட்டேன்
வாய்சொல்லில் குணம் என்பார் பணம் பின்னால் பேயாவோர் 
கொடுமைகளை தான்கியேனும் குடும்பத்தை காக்கவேண்டும் 
பற்றைக்குள் வழிகாட்டும் ஒற்றையடி பாதையாக..

கைகளிலே காய்ப்புக்களும் கால் தனிலே லாடங்களும்  
மனதோடு காயங்களும் இமையோடு ஈரங்களும் 
நிறுத்தமின்றிய பயணத்தில் நிலையில்லா வாழ்க்கையிது 
அள்ளிக்கொடுக்க மனமிருக்கு கிள்ளிகொடுக்க யாருமில்லை 
முள் நிறைந்த வழியினிலே பயணத்தை முடிப்பேனா?
இல்லை முடிக்காமல் நான் இங்கே பயத்தாலே இறப்பேனா? 

No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket