Saturday, December 31, 2011

புத்தாண்டே...

வருடம் ஒருமுறை 
பிறக்கும் பிறப்பே 
உன்னை வரவேற்க 
உலகமே தயார் நிலையில்..

கதிரவனின் ஒளிவாங்கி
கதிரெல்லாம் ஒளியேற்றி 
உழவன் வாழ்வில் மெருகேறும் 
சிறப்பாண்டாய் நீ வருக 

கருமுகில் படையெடுத்து 
அடாதமழை விடாது பெய்து 
தொற்று நோய் உருவெடுக்கும் 
காலனாய் நீ வேண்டாம் 

நாற்புறமும் சுற்றங்கள் 
நண்பர்கள் உறவினர்கள் 
பாசமழை பொழியும் 
நல்லாண்டாய் நீ வருக..

Sunday, December 25, 2011

சுனாமி

நீலக்கடலே உன்னில் 
நீந்திவிளையாடினோமே
உன் கரையில் கூடிக்குலாவி
கொஞ்சிப்பேசிய உறவுகள் எல்லாம் 
உருக்குலைந்த பிணமாக 
கடலில் பாதியும் கரையில் 
மீதியுமாய் கையில் தந்தாயே..

பூவென்றும் பிஞ்சென்றும் 
அறியாதா? உன் மனம் 
கடல் கொண்ட குடல் என்ன 
உயிர் கொண்ட உடலை 
இரை கேட்கும் மிருகமா? 

உன் அலையால் தவழத்தான் 
முடியும் என்று என்றோ ஒருவன் சொன்னானே 
அந்தக்கூ ற்றின் மேல் கொண்ட சீற்றமா ?
ஆணவத்தில் நீ ஆடிய கோரத்தாண்டவம் ?

Saturday, December 24, 2011

வேண்டாம்

கடந்து வந்த காலங்களே 
கொஞ்சம் களைப்பாற மாட்டீர்களா? 
பல ஆண்டு தாண்டி இப்போ 
இருபத்தோராம் நூற்றாண்டில் நாம் ..

வாள் ஏந்திய மன்னர்கள் 
தலைக்கனம் கொண்ட வல்லரசுகள் 
போதித்த போதனைகள் 
புதைபட்டுபோகட்டும்..

பெற்ற பிள்ளையும் 
புறம் தள்ளிய அன்னையும் 
கருத்து வேறுபாட்டால் 
கண்கலங்க வேண்டாமே..

மாதுவை கண்ட பின்பு 
மதிகெட்டுப்போய் நின்று 
நண்பனும் நண்பனும் 
மல்லுக்கு நிற்க வேண்டாம்.

சொத்துக்கள் வேண்டுமென்று 
சொந்தங்கள் கூடிவந்து 
கல்லறைகள் கட்ட வேண்டாம்..

Friday, December 23, 2011

நிலா

அந்தரத்தில் தொங்கும் நிலா 
அழகான வெள்ளை நிலா 
பிள்ளை சோறு உண்ண நிலா 
கொள்ளை இன்பம் தந்த நிலா..

ராத்திரியில் விழித்திருந்து 
பகலிலே படுத்திருப்பாய் 
நீளமான இரவுகளில் 
என் வழியில் ஒளி தருவாய் 

கவிஞன் சொல்லெடுக்க 
மூலதனம் நீதானே 
உவமை ஊற்றுக்களில்
நீரோட்டம் நிலா தானே..

உனக்குள்ளே ஒரு பாட்டி 
இறக்காமல் இருக்கின்றாள் 
அவள் சுட்ட வடை எல்லாம் 
ஆம்ஸ்ட்ராங் களவாட வந்தானா? 

Thursday, December 22, 2011

தேடல்

சீவிச்சிங்காரிச்சு 
சிறுவட்டப் பொட்டுவைச்சு
கட்டழகன் வருவானென 
கனவொன்று கானுறியோ..

காலையில் வாசல் கூட்டி
மாக்கோலம் நீபோட்டு
கண்ணாலே தேடுறியே 
கண்ணாளன் வரலையா?

கல்லூரி வாசலிலே 
பலநூறு முகங்களிலே 
சலிக்காமல் தேடுறியே 
சிறகோடு வந்தானா?

பட்டாடை நீ பூண்டு 
கொத்தோடு பூக்கொண்டு 
கோயிலுக்குள் தேடுறியே 
பூப்போட்டு கும்பிடவா?

Wednesday, December 21, 2011

அவள்

சலனமின்றி சிரிக்கும் நிலவு 
அள்ளி அணைக்க துடிக்கும் இரவு 
அவளின் நினைவை புசிக்கும் பொழுது 
எனக்குள் புதிதாய் இன்ப உணர்வு.. 

சோலையிலே சிரிக்கும் மலர்கள் 
சாலையோரம் பறக்கும் பறவை 
காதோரம் கவிபாடும் தென்றல் 
அவள் வந்தால் கொஞ்சம் வெட்கும்.

படித்த நாளிதழ் பழைய பேப்பர் ஆயாச்சு 
எடுத்த நிழல் படம் தெளிவற்றுப்போயாச்சு 
படித்த நண்பர்கள் பட்டணம் சென்றாச்சு 
அவள் நினைவுகள் நெஞ்சோடு தங்கிச்சு..

தட்டிலே போட்ட தோசை 
வட்டமாய் இருக்கையிலே 
பற்றி வாயில் திணிக்கையிலே
தட்டின் மேல் அவளின் முகம்.

Monday, December 19, 2011

விடுதலை

வீட்டுக்காவலில் தவிக்கும் அவள் 
கூந்தலில் தாவிச்சென்று 
ஊர்கோலம் போவதற்கு ஏங்கும்
முள்ளின் காவலில் மலர்ந்த ரோஜா..

சிறகிருந்தும் பறக்கவே 
தெரிந்திடாமல் விழித்திடும் 
வேடன்கையில் சிக்குண்ட 
கூண்டுக்கிளி..

தோகைவிரித்து ஆடிடாமல் 
கட்டிவைத்து அழகு பார்க்கும் 
கான மயில் 

மண் கிழித்து வெளியே வந்தால் 
கல்லொன்று படுத்துக்கிடக்கும் 
தோட்டத்தில் 
தெரியாமல் விழுந்த விதை 

நார்ப்பதைத்தாண்டிவிட்டால்
பசிக்கு திறந்து ருசிக்கு மூடும் 
வினோதமான பூட்டுப்போட்டு 
நாவினைப்பூட்டி வைக்கும் வாய்

Sunday, December 18, 2011

அமைதி மலரட்டும்

தீப்பந்தங்கள் எல்லாம்
தீபமாய் ஒளிரட்டும்
துப்பாக்கித் தோட்டாக்கள்
துப்பற்றுப்போகட்டும்,,

அராஜகம் பேசும் அரிவாள்கள்
சமையலறை சேரட்டும்
அதிகாரம் செய்யும் அதிகாரிகள்
ஆன்மீகவாதி ஆகட்டும் ..

ஜாதிகளின் பெயர்கள் எல்லாம்
நாதியற்றுப்போகட்டும்
சிறைகொள்ளும் கூடங்கள்
சிறுவர் பூங்காவாகட்டும்..

முரண்படும் கருத்துக்கள்
முகமலர்ந்து சிரிக்கட்டும்
இறக்காத சிலுவைகள்
இறைவனடி சேரட்டும்

Saturday, December 17, 2011

எனக்கு மட்டுமே தெரிந்த வலிகள்

வாய்மொழி அறியா வயதினிலே 
பிஞ்சு வயிற்றில் பஞ்சம் வந்தால் 
கொஞ்சும் தாயை கெஞ்சுவதற்கு 
தெரியாமல் துடித்த வயிறு..

குளிர்கால தொடர் காய்ச்சல் 
வருகையை தடுத்து நிறுத்த 
பட்டம் படித்த மருத்துவனொருவன் 
பரிவின்றி குத்திய ஊசி..

களை நிறைந்த விளை நிலத்தில் 
காத்தாடி கொண்டு போகையிலே 
காலணியை கிழித்துவிட்டு 
காலினை தைத்த முள் ..

ஓலை வீட்டில் ஒழுகும்போது 
தத்தி விளையாடும் புத்திகொண்ட 
சிறுபிள்ளை நாளை நிலை எண்ணி 
கண்ணெனும் கருமுகில் உடைந்து 
உதட்டோரம் உப்புக்கரிக்கும் துளிகள்

Friday, December 16, 2011

கூண்டுக்கிளியே..

சீமெந்து கூட்டுக்குள்
சிறைபட்ட பெண்ணே 
உன்பார்வையின் நீளங்கள் 
அளந்தன என்னை..

உன்வீட்டு பாதைகளை 
கடந்தேகும் போதெல்லாம் 
காந்தம்போல் கவருகின்ற 
மல்லிகைப்பூ கொண்டைக்காரி 

யாழ் இனிது குழல் இனிது 
இரண்டுக்கும் மேல் 
பூட்டுபோட்ட கதவின் பின் 
உன் வாய் மலரும் பா இனிது 

உள்ளூர் கோயிலிலே 
ஊருசனம் காத்திருக்க 
உன் தாழிட்ட கதவு முன்னே 
தரிசனத்திற்காய் தவம் இருப்பேன் 

Thursday, December 15, 2011

என்ன வாழ்க்கைடா இது?

கண்ணகியின் மண்ணில் 
கலைகள் பயின்றுவர 
தங்கை கண்ணகியை 
தனியாய் அனுப்ப துணிவில்லை 

சாலை மீது பேருந்தில் 
நகரா மரம் நகரும் போது 
தொட்டுப்பார்ப்பவனை 
தட்டிகேட்க முடியவில்லை 

மனுநீதி காத்த சோழன் 
தீர்ப்பளித்த திருநாட்டில் 
நீதிக்கு சோதனைகள் 
தருவோர் தான் போதகர்கள் 

சேவை செய்து வாழவேன்றால் 
வேலை செய்ய நேரம் இல்லை 
கூலிக்கு வேலை செய்யும் 
காலமெல்லாம் ஊழிக்காலம்..

Wednesday, December 14, 2011

ஒப்பனை

இயற்கைக்கும் செயற்கைக்கும் 
இடையில் ஒரு போராட்டம் 
வயதுக்கும் பொலிவுக்கும் 
நடுவில் ஒரு நல்வரவு 

வீதி வரும் கிளிகளிலே 
இல்லை பஞ்ச வர்ணம் 
ஆனால் அவர் முகங்களிலோ 
காணமுடியும் பலவர்ணம் 

காறி உமிழ்ந்த பாக்கு நீர்போல் 
சிரம்மேல் சிறு குட்டை 
எண்ணெய் வைத்து தோயாமல் 
சேவல் போலே ஒரு கொண்டை

நள்ளிரவில் மனைவியை 
பார்த்து அலறும் கணவன் 
காரணம் அவள் முகத்தில் 
மோகினியில் உருவம் 

Tuesday, December 13, 2011

பணம்

படித்தவனோ பாமரனோ 
சிரிக்க வேண்டும் என்றால் 
கிடைக்க வேண்டும் பணம் 

அயல் நாட்டின் அழகு காண 
சொந்த வீட்டில் சொந்தம் சேர 
இரவு வெளிக்கும் நிலவை ஏக 
வேண்டும் அச்சடித்த காகிதம்

ஆசைகள் பல விதம் 
ஒவ்வொன்றும் ஒரு விதம் 
அதை நிறைவேற்றும் ஒரே இனம் 
அதன் பெயர் தான் பணம்...

Monday, December 12, 2011

வறுமை

எண்ணையின்றி எரியமறுக்கும்
விளக்கினை அணைத்துவிட்டு 
முழுமதியின் நிலவொளியை 
வேண்டிநிற்கும் படிப்பாளி..

நண்பகலில் சூரியனும் 
நள்ளிரவில் சந்திரனும் 
உச்சம் கொடுக்கும் 
ஓலைக்கூரை...

வருகின்ற வரனுக்கு 
தனம் இன்றி தவித்திருக்கும் 
கிழிந்த பாயில் படுத்துறங்கும் 
அழகியின் தாய்க்கிழவி..

Sunday, December 11, 2011

கொடுமை

அமாவசை நாளன்று 
எதிர் வீட்டு ஜன்னலில் 
எட்டிப்பார்த்த நிலவு 
வீட்டுக்காவலில்...

விலைஉயர்ந்த பொருட்களை 
விளம்பரத்தில் பார்த்து 
அடம் பிடித்து ஓய்ந்துபோன 
ஓலைவீட்டு குழந்தை..

குடல் கொண்ட உடல் 
கொண்ட பசிபோக்க 
கடல் சென்ற மீனவன் 
புயல் கொன்று பிணமாக...

பாவாடை தாவணியில் 
பார்த்த அழகெல்லாம் 
ஜன்னல் வைத்த ஜாக்கட்டில் 
செத்துப்போகும் கலாச்சாரம்..

Saturday, December 10, 2011

கவிஞன் என்பவன்

கவிச்சோலை மலர்வதற்காய் 
சிந்தனையில் உரம் போட்டு 
உயிர்பிழிந்து தண்ணீர் ஊற்றுவான்..

சொல்லேனும் பூவெடுத்து 
வார்த்தைகளை நாராக்கி 
கவிதை எனும் சரம் தொடுப்பான் 

ஐம்பூதங்களையும் 
ஆயிரம் பொய் சொல்லி 
அழகுத்தமிழில் எடுத்துரைப்பான் 

ஐம்புலனும் அழகுபெற 
உயிர் மெய் எழுத்துக்களைத்தழுவி 
உவமை எனும் ஊற்றெடுப்பான் 

நீல மைவேண்டி 
வானத்தின் எல்லைகளை 
தேடுவதற்கு முகில் குடைவான் ..

Friday, December 9, 2011

பள்ளிக்கூட நாட்கள்
வானம் வெளிக்கிறது ஆனால்
இமை மட்டும் திறக்க மறுக்கிறது
அன்னையவள் ஆரவாரிப்பில்
சண்டையிட்டு விழிக்கிறது


செயல் இழந்த கால்கள்
குளியலறை சேர்கின்றன
ஊக்க மருந்தாய் அம்மா தந்த
அன்புகலந்த கோப்பியினால் ..

எலும்பை மறைக்கும் தோலைப்போர்த்த
வெண்ணிறமாய் சிரிக்கிறது
அம்மாவின் கைரேகை அழித்த
அடிப்படைதேவைகளில் ஒன்று..


தூக்கம் தொலைத்து அருளிய
உணவினை வயிற்றினுள் ஒழித்து
காலை மலர்ந்த மொட்டாக
வீட்டை விட்டு வீதியில் ..

Thursday, December 8, 2011

மது

மருந்துண்டால் கசக்கும் என்று
மறுத்த நாவெல்லாம்
விரும்பி நாடும் கசப்பு
செந்தமிழ் சுரந்த நாவெல்லாம்
வன் தமிழ் சுரக்கும் சுரப்பிகளாவதே
மது கொண்ட சிறப்பு...

இளசுகளும் பழசுகளும்
பேதமின்றி காதலிப்பார்
மதுவினை காதலித்து
மண்ணுக்கு முத்தம் கொடுப்பர்
நிலத்தினில் தவழ்ந்து கொண்டு
மேகத்தில் பறக்கிறோம் என்பர்..

மது காட்டும் வழிசென்று
அதன் சொல் கேட்டு நடப்போர்
கட்டழகி வீட்டில் இருக்க
கிழவியிடம் காதல் செய்வர்
நெரிசல் கொண்ட வீதியிலும்
தன்னைத் தானே துகிலுரிவர்..

Tuesday, December 6, 2011

தங்கை

சின்னஞ்சிறு விழியாலே 
வண்ணக்கதை பல பேசி 
கலகலக்கும் சிரிப்பாலே 
உயிரினை ஆரத்தழுவி 
நடனமாடும் ஜடைகளுடன் 
துள்ளி வரும் மான்குட்டி...

கண்ணிரண்டில் மாயம் செய்யும் 
கருநீல விழி சொந்தக்காரி..
கட்டி வைத்த துணியை நீக்கி 
கண்ணாமூச்சி ஆடிடுவாள்..
பார்வை கொண்ட குருடர்களாய் 
அவள் கையில் அகப்படுவோம்...

பாவையை கண்டதும்..

கருவோடு என்னை தாங்கி
பத்துத்திங்கள் பத்திரமாய்
என்னை ஈன்றேடுக்க நீபட்ட
பெரும் பாடு
சொல்லியழ யாரும் இல்லை
நான் அழுதால்
நீ துடிப்பாய் நீ அழுதால்
யார் துடிப்பார்?

ஐம் புலன் தந்தாய்
அதற்கு அசைவும் தந்தாய்
ஆனால் நீ மட்டும் ஏனோ
உன்னை பற்றி எண்ணவில்லை?
புரண்டு படுத்தால்,
கருவிலேயே கலைந்து விடுவோம் என்றா
தூக்கத்தை தொலைத்து விழித்திருந்ததாய்?

நான் தூங்க நீ விழித்து ,
தாலாட்டு நீ பாடி,
உறங்கிய பின் நீ உண்டு
நான் சிணுங்கியதும்
உணவை வெறுத்து
ஓடிவந்து கட்டி அணைத்து
முத்தமிட்டாயே தாயே ...!!!

Monday, December 5, 2011

மனைவி

தாலியை வேலியாக்கி
தன்னையும் திரியாக்கி
ரணமான வாழ்வானாலும்
சிலுவைகளை சுமந்து கொண்டு
முழுமதியாய் ஒளி கொடுத்து
பிறையாக தேயும் நிலா...

வாழையடி வாழையாக
தலை முறைகள் தளைப்பதற்காய்
கருவிலே சிசுவையும்
மனதிலே பதியையும்
சுளிக்காமல் சுமக்கின்ற
வாழ்க்கை சுமைதாங்கி...

Sunday, December 4, 2011

மழையே..

வான் நின்று மேகம் வழங்கும்
துளிகளாக நதியை சேரும்
நதியெல்லாம் ஒன்று கூடி
வற்றாத கடலை நாடும்
கடலிலே அலையாகும்
மீன்களின் உறவாகும் மழையே ..

மண்ணிலே நீ விழுந்தால்
சிரித்திடுமே மரங்களெல்லாம்
மரத்திலுள்ள பூக்களெல்லாம்
மகரந்த சேர்க்கை செய்திடுமே
மண்ணிற்குள் மழை அடங்கி
கிணற்று வாளியில் வெளிவருமே..

Saturday, December 3, 2011

புதுமைப்பெண்

உன் பார்வையின் நீளம் நைல் நதியா? 
உன் கூந்தலில் நானும் நீந்த வரவா? 
என் கனவுகளில் உன் கலர் படமா? 
மோனாலிசா தான் உன் இயற்பெயரா? 
நீ குடியிருப்பதெந்தன் மனச் சிறையா? 
உன்னை விட்டு பிரியேன் உயிர் நிழலாய்.

பாசத்தில் எந்தன் தாய் நீயா? 
கோபத்தில் கண்டிக்கும் கண்ணகியா? 
சேவைகள் செய்வதில் தெரேசாவ? 
பணிவிடை செய்வதில் வாசுகியா? 
துன்பங்களை சந்திப்பதில் சீதையா? 
சிலுவைகளை சுமப்பதில் கடவுளோ? 

Friday, December 2, 2011

காதல் தேவதை

பூக்களின் தேனை எல்லாம் 
வார்த்தையிலே கொண்டவளே 
முழுமதியின் நிலவொளியை 
சிரிப்பினிலே தந்தவளே 
உன் சிரிப்பலையின் ஓசைகளை 
மனதுக்குள் மீட்டுகிறேன்...

உன் நிழல்படத்தின் வர்ணங்களா
வானவில் உடுத்திக்கொண்டது? 
உன்னை தீண்டி விட வேண்டுமென்றா 
மழைத்துளியும் இறங்கிவருகிறது ?
வான்போரவையில் விழுந்த ஓட்டை வழியே 
எட்டிப்பார்ப்பது உன் மதி முகம் தானா?

யாவும் கற்பனை

வீரென கத்திய கடிகார அறிவிப்பால் 
சட்டென எழும்பி பட்டென குளித்து 
அம்மா தந்த உணவினை புசித்து 
கொட்டகையிலிருந்த காரினை 
அவசரமாய் இயக்கிக்கொண்டு 
அலுவலகம் ஏகிறேன்.....

என் முகம் கண்ட ஊழியரெல்லாம் 
கைகட்டி வணக்கம் சொல்லி வரவேற்று 
ஜில்லென்று குளிரூட்டிய என் அறையில் 
முகாமையாளர் பெயர் பலகை பின்னே 
சுற்றிவரும் சுழல் நாற்காலியில் 
அமர்ந்து கொண்டு அழுத்துகிறேன் மணியை ...

Thursday, December 1, 2011

மதவெறி

இறப்பிற்கும் பிறப்பிற்கும் இடையிலே 
இறைவன் கொடுத்த இடைவேளையில் 
இளைப்பாறாமல் வெறி பிடித்து அலையும் 
சில ஆறறிவு ஜீவன்களின் ஆணவம்..

செல்லும் வழி வேறாகினும் சேரும் 
இடம் ஒன்றுதான் என எண்ண மறுக்கும் 
சில மூடர்களின் அறியாமையின் 
மூலதனம் தானோ மதவெறி ..