Monday, November 21, 2011

கைதியின் மடல்

காதல் தந்த நினைவுகளில் கண்மூடி தவமிருந்தேன் 
காலையில் கலைய மறுக்கும் கனவுகள் கண்டிருந்தேன் 
பசியென்றால் எதுவென்று சத்தியமாய் நான் அறியேன் 
சிரிப்பின்றி என் உதடு ஒரு போதும் இருந்ததில்லை 
சிப்பிக்குள் முத்தாக சொந்தங்கள் எனை சூழ இருந்ததுவே 
இன்று தூண்டிலுக்கு இரையான புழுவாகி போனேனே.

காவல்துறை சொத்தான சந்தேகம் என் வாழ்வில் 
தீக்குச்சிக்கு பயந்தவனை தீவிரவாதி என்றுவிட்டதே
நிலவை சுடும் என்றால் நம்புகிற உலகம் 
என்னை சுற்றவாளி என்றால் நம்ப மறுக்கிறதே 
குற்றவாளி கூண்டு கூட தலை குனியும் வெட்கத்தால் 
சத்திய சோதனை எனக்குதான் வரவேண்டுமா? 


அம்மா இப்போது நான் யாருக்கு சொந்தம் ?
என்னை சிறை கொண்ட சிறைச்சாலைக்கா? 
இல்லை முறைக்கும் முட்கம்பி வேலிகளுக்கா?
என்னை பிரிய மறுக்கும் லத்தி கம்புகளுக்கா? 
என்னை காதலிக்கும் கண்ணீர் துளிகளுக்கா? 
என்னை ஆட்கொண்ட நான்கு சுவர்களுக்கா?

தமிழனாக பிறந்ததுதான் நான் செய்த பாவமா? 
சத்தியத்தை கொல்வதுதான் சோழன் தந்த நீதியா? 
மனு நீதி காத்த சோழன் கதை கூட பொய்தானா?  
கயவர்கள் விரித்த வலைக்கு பலியாடு நான் தானா? 
சூழ்ச்சிமிக்க கேள்விக்கு தலை ஆட்டத்தான் வேண்டுமா? 
எதற்காக நான் பிறந்தேன் என்றெண்ணுகிறேன் இப்போது ...

No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket