Friday, November 18, 2011

மறக்குமா நெஞ்சம்?

வணங்கா மண்ணில் வரிப்புலியின் வீரம்
இளமையோடு வீசுகின்ற இளந்தென்றல் 
கனிவோடு எமை ஈர்க்கும் அழகான சூழல் 
காதுகளை கவர்ந்திழுக்கும் கன்னியரின் பாடல் 
பரிவோடு எமை நோக்கும் பாசமுள்ள தாய்மார் 
அன்போடு எமை முறைக்கும் அன்பான பெண்கள் 
இவையெல்லாம் மறக்குமா நெஞ்சம்?


விளக்கேந்திய மாடங்கள் கல்வி தந்த கூடங்கள் 
முத்தமிழும் நித்தம் ஜொலிக்கும் நம் கோயில்கள் 
நடை பயின்ற கடற்கரையும் நடந்து திரிந்த வீதிகளும் 
திருவிழா காலமும் திருமுறை வாசகமும் 
தெருத்தெருவாய் அடித்த அரட்டைகளும் 
மறக்குமா நெஞ்சம்?


நிம்மதியை குலைத்த சிங்களத்தின் கொடிய போர்
வருங்கால சந்ததிக்கு கிடைத்த வக்கிர கிறுக்கல்கள் 
தாயான என் தாய் நாட்டில் கழுகளின் கால் தடங்கள் 
சீராட்டிய என் தீவில் சிங்களவரின் வெறியாட்டம் 
தலை சிறந்த கல்வியில் தரங்கெட்ட தரப்படுத்தல் 
விளக்கேந்திய மாடங்களில் கொழுந்து விட்டு எரிந்த தீ 
இவை எல்லாம் மறக்குமா நெஞ்சம்?


அரிதான தானமும் தவமும் 
மிகவும் கொடிதான இளமையில் வறுமையும் 
முட்கம்பிகளும் முறைக்கும் மடையர்களும் 
பேசத்தெரிந்த ஊமைகளாய் நம் மக்களும் அவர்தம் மனங்களும் 
காட்டிகொடுத்த கயவர்களும் கரை தேடும் ஓடங்களும் 
சலசலப்பின்றி குரல் கொடுக்கும் சர்வதேசமும் 
அமைதியான ஐ.நா வும் 
இவை எல்லாம் மறக்குமா நெஞ்சம்?


தமிழன் படை எடுத்தல் தடை செய்யும் உலகம் 
தமிழன் குடி அழிந்தால் சத்தமின்றி துயிலும் 
ஈழத்தில் நடந்தேறிய கோரத்தாண்டவங்கள் 
குடியழித்த அண்டைநாடும் கூட இருந்த அயல் நாடுகளும் 
ஈழத்தில் நடந்த இனவெறித்தாக்குதலும்
இந்தியா வழங்கிய கொத்துக்குண்டுகளும் 
மறக்குமா நெஞ்சம்?


இவற்றை எல்லாம் தாண்டி
எழில்கொஞ்சும் ஈழத்தில் எம்மவரின் தியாகம் 
சொல்லியழ வார்த்தை இல்லை 
போதும் நம்மை அழித்ததும் நாம் அழிந்ததும் 
விடைகொடுக்க தயாராவோம். 
இதுவரை விடை காணா கேள்விகளுக்கு ...



No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket