Tuesday, December 6, 2011

தங்கை

சின்னஞ்சிறு விழியாலே 
வண்ணக்கதை பல பேசி 
கலகலக்கும் சிரிப்பாலே 
உயிரினை ஆரத்தழுவி 
நடனமாடும் ஜடைகளுடன் 
துள்ளி வரும் மான்குட்டி...

கண்ணிரண்டில் மாயம் செய்யும் 
கருநீல விழி சொந்தக்காரி..
கட்டி வைத்த துணியை நீக்கி 
கண்ணாமூச்சி ஆடிடுவாள்..
பார்வை கொண்ட குருடர்களாய் 
அவள் கையில் அகப்படுவோம்...


அம்மா எனக்கு உணவுதந்தால் 
மெல்ல வந்து கவர்ந்திடுவாள் 
வாங்கி வரும் இனிப்புக்களை 
தன் வாய்க்குள் சிறைவைப்பாள்
அம்மா என்னை முத்தமிட்டால்
தள்ளி நின்று சினுங்கிடுவாள்..

புத்தாண்டு தான் பிறந்தால் 
பட்டாடைகளில் மின்னிடுவாள் 
தொட்டுப்பேசும் குட்டிக்கையில் 
மருதாணி கோலம் போட்டிருப்பாள் 
முல்லை மலரும் சொக்கிப்போகும் 
என் தங்கையவள் சிரிப்பினிலே ..

சிந்தனையில் சிரிக்க வைக்கும் 
குறும்புகளின் சொந்தக்காரி
வானவில்லின் வர்ணம் கொண்ட 
தொட்டு வரையா ஓவியம்
உள்ளங்களை வருடிவிடும் 
இதமான தென்றலவள்..

கடல் மூழ்கி பார்த்தாலும் 
கிடைக்காத முத்தவள் 
விழி மூடி கிடந்தாலும் 
மறையாத விம்பம் அவள் 
நான் உலகறிந்த செல்வங்களுக்கும் 
ஈடிணையற்ற ஒரே நங்கை அது என் தங்கை...

No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket