Friday, December 16, 2011

கூண்டுக்கிளியே..

சீமெந்து கூட்டுக்குள்
சிறைபட்ட பெண்ணே 
உன்பார்வையின் நீளங்கள் 
அளந்தன என்னை..

உன்வீட்டு பாதைகளை 
கடந்தேகும் போதெல்லாம் 
காந்தம்போல் கவருகின்ற 
மல்லிகைப்பூ கொண்டைக்காரி 

யாழ் இனிது குழல் இனிது 
இரண்டுக்கும் மேல் 
பூட்டுபோட்ட கதவின் பின் 
உன் வாய் மலரும் பா இனிது 

உள்ளூர் கோயிலிலே 
ஊருசனம் காத்திருக்க 
உன் தாழிட்ட கதவு முன்னே 
தரிசனத்திற்காய் தவம் இருப்பேன் 


வீதிவரும் உன் நாய்க்குட்டி 
உச்சிதனை நான் முகர்ந்து 
காதுக்குள் கிசுகிசுத்த 
சேதியினை சொல்லலையா?

வீணையில்லாக் கலைமகளே 
உன்பேனை வரைந்த 
காகிதம் தாங்கிய கவிவரிகள் 
ஜன்னலிடை வழியே 
காற்றினில் வந்து என் 
மூச்சினில் கலந்ததே 

குடத்திலிட்ட விளக்கு போலே 
அடைந்து கிடக்கும் வெண்ணிலாவே 
உன்வெளிச்சம் கடன்வாங்கி 
எப்போது தான் ஒளிர்வேனோ?

அத்தி பூத்தாற்போல் 
ஜன்னல்வழியே 
எட்டிப்பார்க்கும் தேவதையே 
வீட்டுக்காவல் போதுமடி..

உவமைகளில் ஊறவைத்த 
கவிதை ஒன்னு காத்திருக்கு 
இலைமறை காயாக 
ஒளியாமல் முகம் கொடு..

மெல்ல மெல்ல பூவாய் மாறும் 
சின்னச்சின்ன ரோஜா மொட்டு 
கொண்டுவந்து காத்திருக்கேன் 
கவர்ந்து செல்ல வாடி பெண்ணே ..

கூண்டுக்கிளியே
நீ வெளிவருவதெப்போது ? 
உன்வரவை எதிர்நோக்கி 
இலவுகாத்த கிளி...

No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket