Saturday, December 17, 2011

எனக்கு மட்டுமே தெரிந்த வலிகள்

வாய்மொழி அறியா வயதினிலே 
பிஞ்சு வயிற்றில் பஞ்சம் வந்தால் 
கொஞ்சும் தாயை கெஞ்சுவதற்கு 
தெரியாமல் துடித்த வயிறு..

குளிர்கால தொடர் காய்ச்சல் 
வருகையை தடுத்து நிறுத்த 
பட்டம் படித்த மருத்துவனொருவன் 
பரிவின்றி குத்திய ஊசி..

களை நிறைந்த விளை நிலத்தில் 
காத்தாடி கொண்டு போகையிலே 
காலணியை கிழித்துவிட்டு 
காலினை தைத்த முள் ..

ஓலை வீட்டில் ஒழுகும்போது 
தத்தி விளையாடும் புத்திகொண்ட 
சிறுபிள்ளை நாளை நிலை எண்ணி 
கண்ணெனும் கருமுகில் உடைந்து 
உதட்டோரம் உப்புக்கரிக்கும் துளிகள்


படித்துச்செல்ல பள்ளி வந்தால் 
அடித்துச்சென்ற வாத்தி
தடித்து வந்த காயத்திற்கு 
தைலம் போடும் அம்மா..

பக்கத்தில் நின்ற பட்டாடைக்கு 
பக்குவமாய் ஒரு கவி ஒப்பித்தால் 
கள்ளிக்காட்டு கம்பன் நீயா என்ற 
சொல்லாலே சிதைந்த மனம் 

சொந்த நாட்டில் சொந்தங்கள் 
கொத்துக்கொத்தாய் செத்தபோது 
முகம் புதைத்தழ நெஞ்சின்றி
மண்ணிலே புதைந்த முகம்.

ஊமை கனவில் வந்த கனா 
மொழி உருப்பெறாமல் போனதுபோல் 
பேசத்தெரிந்த ஊமையாக்கி 
நெஞ்சில் தங்கிய காதல்..

காதல் தந்த வலிகளிலே
மனக்கோட்டை இடிந்து 
ராப்பகலாய் இமை மூட மறுத்து 
வலிகளோடு விழித்த விழிகள்..

எனக்கு மட்டுமே தெரிந்த வலிகள் 
என்னால் மட்டுமே உணர முடியும் 
ஆறுதல் சொல்ல ஆயிரம் பேர் 
அனுப்பவிப்பது நான் அல்லவா?

No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket