Thursday, December 8, 2011

மது

மருந்துண்டால் கசக்கும் என்று
மறுத்த நாவெல்லாம்
விரும்பி நாடும் கசப்பு
செந்தமிழ் சுரந்த நாவெல்லாம்
வன் தமிழ் சுரக்கும் சுரப்பிகளாவதே
மது கொண்ட சிறப்பு...

இளசுகளும் பழசுகளும்
பேதமின்றி காதலிப்பார்
மதுவினை காதலித்து
மண்ணுக்கு முத்தம் கொடுப்பர்
நிலத்தினில் தவழ்ந்து கொண்டு
மேகத்தில் பறக்கிறோம் என்பர்..

மது காட்டும் வழிசென்று
அதன் சொல் கேட்டு நடப்போர்
கட்டழகி வீட்டில் இருக்க
கிழவியிடம் காதல் செய்வர்
நெரிசல் கொண்ட வீதியிலும்
தன்னைத் தானே துகிலுரிவர்..


கொடுப்பவன் குடிவாழ
குடிப்பவன் குடி கெடுக்கும்
ருசித்து குடிப்பவனை
புசிக்க காத்திருக்கும்
குடிகாரன் குடியழிக்க
மதுக்கடையில் குடியிருக்கும்..

தொட்டுக்கட்டிய தாலி அறுத்தேனும்
தொட்டு நக்க ருசிகேக்கும்
தொட்டு நக்கிய ஊறுகாயில்
சொக்கத்தங்கம் பறிபோகும்
எல்லா சொத்தும் போன பின்னே
துட்டுக்கு பல் இழிக்க தூண்டும் மது

முழுப்பெயரின் முதல் அடியில்
குடிகாரன் முதல் பெயராக்கும்
குடிகாரன் வீட்டினிலே தலை
விரித்து தாண்டவம் ஆடும்
மனைவியும் மக்களும் திண்டாட
குடித்தவன் உடலுடன் தள்ளாடும்..

தன்னை மறந்த குடிகாரன் வீட்டில்
மனைவியில் உடல் சொல்லும்
குடி தந்த வடு..
குழந்தையின் கதை சொல்லும்
தந்தையின் வன்முறை..
குடி வந்து குடி கொள்ளா வீடுகளில்
நல் குடிமகன்கள் குடியிருப்பார்...

No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket