Wednesday, January 25, 2012

ஒரு காதல் கதை (கவிதை)

காற்றலையில் மிதந்து கொண்டு 
காதலியின் வீடுநோக்கி 
தூது போகும் அழகான வெண்புறா 
தொலைக்காட்சி திரையினிலே.. 

தூது போன வெண்புறாவோ 
காதினிக்க சேதிசொல்ல 
தூது கேட்ட காதலியோ 
கனவுலகம் எட்டிப்பார்த்தாள்..

அங்காடித் தெருவினிலே 
அழகான உருவினிலே 
பணிவிலே திமிர்காட்டும் 
பார்வையொன்று வீசியதே..

மான்விழி கெண்டையாள் 
மெல்ல நிமிர்ந்து உற்று நோக்க 
கண்களுக்கு விருந்தாகும் 
விம்பமொன்று கண்ணில் கண்டாள்

ஆயிரத்தில் ஒருவனென்று 
அடிமனது அறைகூவ 
அடியவளோ அசைவின்றி 
அவன் விழியில் கலந்து விட்டாள்..

Sunday, January 22, 2012

கவிதைக்கு கவிதை

ஆதியும் அந்தமும் இல்லா 
அரும்பெரும் சோதியும்
ஒரு கணம் செவிசாய்க்கும் 
பேனை முழங்கும் வரி கேட்க..

காகித குப்பைகளில் 
வீற்றிருக்கும் முத்து 
காதலர் மனங்களை 
கட்டித்தழுவும் சொத்து 

இயற்கையும் செயற்கையும் 
உறவாடி இழையோடும் 
உவமானம் உவமேயம் 
குறைவின்றி வழிந்தோடும் 

நிலவுக்கே அழகூட்டும் 
 ஒப்பனைக்கருவி 
காகிதத்தில் விளையும் 
கருகாத பயிர் ...

Tuesday, January 10, 2012

என்னவளே...

காதல் தந்த கன்னிப்பெண்ணே 
காண ஏங்கும் எந்தன் கண்ணே 
காலை மாலை வாசல் முன்னே 
காத்திருப்பேன் வாடி வெளியே..

தினசரி வருகின்ற தினத்தந்தி போல் வந்து 
என் கைகள் சேர்ந்து விடு 
தினத்தந்தி தாங்கிய கவிதையின் உவமையில் 
உன் கண்கள் காட்டி விடு.

ஏனோ என்னுள்ளே நூறு காட்சிகள் 
நூறும் நீ தானடி 
காதல் எனக்கிங்கு கண்ணா மூச்சியா 
கைகள் அலைகின்றதே..

மனக்கண்ணில் நான் காணும் கனவினில் 
நீ வந்தால் மணிகூட சிறுதுளியே 
சிறுதுளி பெருவெள்ளம் போல் வந்து 
நனைத்தாலும் கண்ணிமை நான் திறவேன்..

Saturday, December 31, 2011

புத்தாண்டே...

வருடம் ஒருமுறை 
பிறக்கும் பிறப்பே 
உன்னை வரவேற்க 
உலகமே தயார் நிலையில்..

கதிரவனின் ஒளிவாங்கி
கதிரெல்லாம் ஒளியேற்றி 
உழவன் வாழ்வில் மெருகேறும் 
சிறப்பாண்டாய் நீ வருக 

கருமுகில் படையெடுத்து 
அடாதமழை விடாது பெய்து 
தொற்று நோய் உருவெடுக்கும் 
காலனாய் நீ வேண்டாம் 

நாற்புறமும் சுற்றங்கள் 
நண்பர்கள் உறவினர்கள் 
பாசமழை பொழியும் 
நல்லாண்டாய் நீ வருக..

Sunday, December 25, 2011

சுனாமி

நீலக்கடலே உன்னில் 
நீந்திவிளையாடினோமே
உன் கரையில் கூடிக்குலாவி
கொஞ்சிப்பேசிய உறவுகள் எல்லாம் 
உருக்குலைந்த பிணமாக 
கடலில் பாதியும் கரையில் 
மீதியுமாய் கையில் தந்தாயே..

பூவென்றும் பிஞ்சென்றும் 
அறியாதா? உன் மனம் 
கடல் கொண்ட குடல் என்ன 
உயிர் கொண்ட உடலை 
இரை கேட்கும் மிருகமா? 

உன் அலையால் தவழத்தான் 
முடியும் என்று என்றோ ஒருவன் சொன்னானே 
அந்தக்கூ ற்றின் மேல் கொண்ட சீற்றமா ?
ஆணவத்தில் நீ ஆடிய கோரத்தாண்டவம் ?

Saturday, December 24, 2011

வேண்டாம்

கடந்து வந்த காலங்களே 
கொஞ்சம் களைப்பாற மாட்டீர்களா? 
பல ஆண்டு தாண்டி இப்போ 
இருபத்தோராம் நூற்றாண்டில் நாம் ..

வாள் ஏந்திய மன்னர்கள் 
தலைக்கனம் கொண்ட வல்லரசுகள் 
போதித்த போதனைகள் 
புதைபட்டுபோகட்டும்..

பெற்ற பிள்ளையும் 
புறம் தள்ளிய அன்னையும் 
கருத்து வேறுபாட்டால் 
கண்கலங்க வேண்டாமே..

மாதுவை கண்ட பின்பு 
மதிகெட்டுப்போய் நின்று 
நண்பனும் நண்பனும் 
மல்லுக்கு நிற்க வேண்டாம்.

சொத்துக்கள் வேண்டுமென்று 
சொந்தங்கள் கூடிவந்து 
கல்லறைகள் கட்ட வேண்டாம்..
PhotobucketPhotobucket
Photobucket