Saturday, December 31, 2011

புத்தாண்டே...

வருடம் ஒருமுறை 
பிறக்கும் பிறப்பே 
உன்னை வரவேற்க 
உலகமே தயார் நிலையில்..

கதிரவனின் ஒளிவாங்கி
கதிரெல்லாம் ஒளியேற்றி 
உழவன் வாழ்வில் மெருகேறும் 
சிறப்பாண்டாய் நீ வருக 

கருமுகில் படையெடுத்து 
அடாதமழை விடாது பெய்து 
தொற்று நோய் உருவெடுக்கும் 
காலனாய் நீ வேண்டாம் 

நாற்புறமும் சுற்றங்கள் 
நண்பர்கள் உறவினர்கள் 
பாசமழை பொழியும் 
நல்லாண்டாய் நீ வருக..


வருட வரும் காற்றெல்லாம் 
நெருடிச்செல்லும் புயலாகி 
மனிதர்களை கவர்ந்து செல்லும் 
கள்வனாக நீ வேண்டாம்..

காதலனும் காதலியும் 
கருத்து முரண்பட்டு 
பிரியாத 
கனிவாண்டாய் நீ வருக 

திறந்தவெளி முகவரியாகும் 
பட்டினி வயிற்றைக்கூறு போடும் 
கோரப்போர்கள் எல்லாம் 
உன் பிறப்பில் வேண்டாமே..

புத்தகமும் பிள்ளைகளும் 
ஒன்றையொன்று நேசிக்கும் 
புத்தாண்டாய் நீ வந்து 
புதுப்பொலிவு தா..

புத்தி தீட்டி எழுதுவோரை 
கத்தி தீட்டி கழுத்தில் வீசும் 
வானர வழிவந்தோருக்கு
வாய்ப்பளிக்க வர வேண்டாம்.. 

இறந்தகால சோகங்களை 
நிகழ்காலத்தில் மழுங்கடித்து 
எக்கரையில் வாழ்வோருக்கும் 
சக்கரை ஆண்டாய் வா..

பஞ்சபூதங்களும் படையெடுத்து 
தகுதிகாண் போட்டிகளை 
ஆர்ப்பரித்து ஆடவரும் 
ஆடுகளமாய் நீ வேண்டாம் ..

போட்டியும் பொறாமையும் 
போர்த்திக்கொண்டு படுக்கட்டும் 
பாசமும் நேசமும் 
துயில் துறந்து எழும்பட்டும்..

happy-new-year-desi-glitters-18



No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket