Wednesday, January 25, 2012

ஒரு காதல் கதை (கவிதை)

காற்றலையில் மிதந்து கொண்டு 
காதலியின் வீடுநோக்கி 
தூது போகும் அழகான வெண்புறா 
தொலைக்காட்சி திரையினிலே.. 

தூது போன வெண்புறாவோ 
காதினிக்க சேதிசொல்ல 
தூது கேட்ட காதலியோ 
கனவுலகம் எட்டிப்பார்த்தாள்..

அங்காடித் தெருவினிலே 
அழகான உருவினிலே 
பணிவிலே திமிர்காட்டும் 
பார்வையொன்று வீசியதே..

மான்விழி கெண்டையாள் 
மெல்ல நிமிர்ந்து உற்று நோக்க 
கண்களுக்கு விருந்தாகும் 
விம்பமொன்று கண்ணில் கண்டாள்

ஆயிரத்தில் ஒருவனென்று 
அடிமனது அறைகூவ 
அடியவளோ அசைவின்றி 
அவன் விழியில் கலந்து விட்டாள்..



மோதிக்கொண்ட விழிகளினால் 
விபத்தொன்று நிகழ்ந்துவிட 
மூடிவைத்த காதல் பேழை 
மெல்ல மூடியகன்றது..

ஊரையே பொய்ப்பித்து 
உறவுமட்டும் வளர்ந்தது 
அவனின்றி நான் இல்லை 
அவளின்றி ஏதும் இல்லை என்ற தூரம்...

காடுகளும் மணல் மேடுகளும் 
கடற்கரை சாலைகளும் 
பசுமையான சோலைகளும் 
தனிமைக்கு துணை கொடுத்தன..

சில மணிநேரப்பிரிவுகளில் 
மூண்டது பனிப்போர் இயற்கையுடன்
தரிசனங்கள் கிடைக்காத நாழிகைகள்
நாடியற்று போயின.. 

தம்மை மறந்த சில நொடிகள் 
மாற்றான் கண்ணில் சிக்கிவிட 
ஊருக்குள் இவள் பற்றி 
புயலாக செய்தி பரிமாற்றம்..

தவம் இருந்த பெற்றோர்கள் 
காதுகளில் ஈட்டிபாய 
கொஞ்சி வளர்த்த பிள்ளையோ 
முதன் முதலாய் கண்டிப்பில்

கண்ணிரண்டில் நீர்த்துளி 
கனவுகளுக்கு இனி பலி 
என்று எண்ணி தன்னை நொந்து 
மெல்ல மெல்ல உயிர் கசிந்தாள்

செல்லமகள் கையினிலே 
பத்திரிக்கை அப்பா தந்தார் 
காதலன் பெயரோடு 
தன் பெயரும் இருக்க கண்டாள்..

விழியாலே நன்றி சொல்லி 
கட்டியணைத்து முத்தமிட்டாள்
பெற்றெடுத்து பாடுபட்டு 
வளர்த்து விட்ட செல்ல மகள் 

ஸ்பரிசமொன்றை உணர்ந்தவளாய் 
மெல்ல திறந்தாள் இமைகளை 
நெற்றியில் உதடு பதித்து 
அவள் காதலன் மன்னிக்கவும் கணவன்..

திரைப்படம் நிறைவு பெற்றது..


No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket