Monday, November 21, 2011

காதலிக்காக கவிதை

உலகுக்கு நீ ஒன்றும் அழகி இல்லை
ஆனால் எனக்கு நீதான் உலக அழகி
பணத்திற்கு நான் அடிமை இல்லை
ஆனால் உன் பாசத்திற்கு நான் அடிமை
சுற்றிவந்த பல வேஷங்களை வெறுத்தேன்  
உன்மேல் கொண்ட நேசத்தினால்...

சுவரில் உள்ள சித்திரங்கள் பிடிக்கவில்லை
என் மனதில் உன் விம்பம் குடியிருப்பதால்
வானவில்லின் வர்ணம் பிடிக்கவில்லை
நீ கண்ணிமைக்கும் அழகினை பார்த்தபோது
கடல் அலையும் எனக்கு பிடிக்கவில்லை
என்னுள்ளே உன் நினைவலைகள் மோதுவதால்...

கைதியின் மடல்

காதல் தந்த நினைவுகளில் கண்மூடி தவமிருந்தேன் 
காலையில் கலைய மறுக்கும் கனவுகள் கண்டிருந்தேன் 
பசியென்றால் எதுவென்று சத்தியமாய் நான் அறியேன் 
சிரிப்பின்றி என் உதடு ஒரு போதும் இருந்ததில்லை 
சிப்பிக்குள் முத்தாக சொந்தங்கள் எனை சூழ இருந்ததுவே 
இன்று தூண்டிலுக்கு இரையான புழுவாகி போனேனே.

காவல்துறை சொத்தான சந்தேகம் என் வாழ்வில் 
தீக்குச்சிக்கு பயந்தவனை தீவிரவாதி என்றுவிட்டதே
நிலவை சுடும் என்றால் நம்புகிற உலகம் 
என்னை சுற்றவாளி என்றால் நம்ப மறுக்கிறதே 
குற்றவாளி கூண்டு கூட தலை குனியும் வெட்கத்தால் 
சத்திய சோதனை எனக்குதான் வரவேண்டுமா? 

Sunday, November 20, 2011

காதல் என்றால்?

காதல் என்றால் கவலையா? 
கானல் நீரின் உருவமா? 
நெருஞ்சி முள்ளின் வடிவமா? 
நெஞ்சை கிழிக்கும் கருவியா? 
பாசம் கட்டும் வேஷமா ?
உயிரை எடுக்கும் யமனா? 
இல்லை ...
இரவை துரத்தும் நிலவா? 
வாசம் வீசும் மலரா? 
கலைய மறுக்கும் கனவா? 
உயிரை கொடுக்கும் உறவா? 
கண்ணிரண்டில் ஒளியா? 
என் வாழ்க்கையின் வழியா? 

விமானத்தில் ஈழத்தமிழன்

எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்
எங்கே போவதென தெரியாமல் போகின்றோம்
தாய் மண்ணை பிரிந்து தாயையும் பிரிந்து
சோகம் மட்டும் சுமந்து செல்கின்றோம் 
உணர்ச்சியை கொன்று வலிகளை சுமந்து
நடக்கின்ற பிணமாய் பறக்கின்றோம் ..

உயிர் அதை காக்க உடலையும் காக்க
வறுமையை போக்க பசியினை நீக்க
பல மைல் தாண்டி பறக்கின்றோம் ..
உடமையை இழந்து உறவினை பிரிந்து
கனவினை புதைத்து கண்ணீரை சுமந்து
வெறும் கையோடு பறக்கின்றோம்

Saturday, November 19, 2011

அம்மா

பத்து திங்கள் பத்திரமாய் கருவோடு எனை தாங்கி
சீராட்டி தாலாட்டி ரத்தத்தை பாலாக்கி எனக்கூட்டி
காரிருளில் கண்விழித்து காவலனாய் நீ மாறி
என் பசியை நீ போக்கி பசிமறந்த பிள்ளையானாய்

கதறி அழும் வேளைகளில் ஓடி வந்து கட்டிடுவாய்
காய்ச்சல் வந்து நான் கிடந்தால் கை மருந்து நீ கொடுப்பாய்
மழையில் நான் நனைத்தால் முந்தானை குடை பிடிப்பாய்
முள் தைக்கும் பாதை தனில் எனக்காக செருப்பாவாய்

புலம்பெயர் தமிழா

ஊரோடு உறவாட முடியாமல், 
வேரோடு உறவிழந்து, 
அயல் நாடெனும் விடுதியில், 
சொந்தபந்தமின்றி தனியாக , 
தன்னுறவுகளுக்காக, 
இராப்பகலின்றி நீ படும் பெரும் பாடு, 
நாமறிவோம்,
பிறநாட்டில் வாழ்ந்தாலும், 
தன்நாட்டு உறவுகளுக்காக, 
நீ சிந்தும் ஒவ்வொரு துளி வியர்வைக்கும், 
பதில் கிடைக்கும் நாள் தொலைவில் இல்லை ..

Friday, November 18, 2011

சிரிப்பு

அருமையான வாழ்வின் அடையாளம் சிரிப்பு
நோயற்ற வாழ்வின் சிறப்பே சிரிப்பு
நண்பர்களை ஒன்றிணைக்கும் ஆயுதம்  சிரிப்பு
பகைவரை பணியவைக்க சிரிப்பே சிறப்பு
மட்டற்ற மகிழ்ச்சியின் மூலதனம் சிரிப்பு
மனிதருக்கு தேவை மகத்தான சிரிப்பு

ஆடவருக்கு தேவை ஆனந்த சிரிப்பு
பெண்டிருக்கு தேவை அடக்கமான சிரிப்பு
அரக்கனின் குணமே ஆணவச்  சிரிப்பு
தேவனின் இயல்பே அன்பான சிரிப்பு
கயவனின் வாயிலும் கபடச்சிரிப்பு
கலைஞனுக்கு அழகு சிந்தனையிலும் சிரிப்பு
PhotobucketPhotobucket
Photobucket